மும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்குள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரச்சாரத்தின் போது தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “மும்பை என்பது மகாராஷ்டிர மாநிலத்தின் நகரம் மட்டுமல்ல; அது ஒரு சர்வதேச நகரம்” என்று குறிப்பிட்டார். அண்ணாமலையின் இந்த கருத்து, ‘மும்பை மராட்டியர்களுக்கே’ என்ற கொள்கை கொண்ட உள்ளூர் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

அண்ணாமலையின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே, தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது: “தமிழகத்திலிருந்து இங்கே வந்திருக்கும் உனக்கும் (அண்ணாமலை), இந்த நிலத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இத்தகைய போக்கு காரணமாகத்தான் அன்று உங்களை (தமிழர்களை) பால் தாக்கரே இங்கிருந்து விரட்டியடித்தார்.

இதுவரை வட இந்தியர்களுக்கு எதிராகப் பேசி வந்த நாங்கள், இனி தென்னிந்தியர்களுக்கு எதிராகவும் பேச வேண்டிய நிலையை உருவாக்குகிறீர்களா?” இவ்வாறு ராஜ் தாக்கரே ஆவேசமாகப் பேசினார். தமிழர்களை இழிவாகப் பேசும் வகையில் அமைந்த இவரது இந்தப் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ராஜ் தாக்கரேவின் இந்தப் பேச்சுக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக திமுக தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் ராஜ் தாக்கரே பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலு , தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக இரு மாநில மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்கள் பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.