பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நகைக்கடை ஒன்றில், சினிமா பாணியில் கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களின் திட்டம் படுதோல்வியில் முடிந்துள்ளது. பாட்னாவின் தீகா பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு முகமூடி அணிந்தபடி வாடிக்கையாளர்கள் போல் இரண்டு பெண்கள் நுழைந்துள்ளனர்.

மேலும் அங்கு நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், திடீரென தங்களது பையில் வைத்திருந்த மிளகுத் தெளிப்பானை எடுத்து கடை உரிமையாளரின் முகத்தில் அடித்துவிட்டு, நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அந்தப் புகையினால் கடையிலிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போதிலும், கடை உரிமையாளர் சற்றும் பதற்றமடையாமல் சாதுரியமாகச் செயல்பட்டார்.

“>

இதனால் கடை உரிமையாளர் உடனடியாகக் கவுண்டருக்கு வெளியே குதித்து ஓடிவந்து, கடையின் ஷட்டரை இழுத்து மூடி இரு பெண்களையும் உள்ளேயே பூட்டினார். இதனால் கொள்ளையடிக்க வந்த பெண்கள் கடையின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். கடையின் உரிமையாளர் சத்தம் போட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீகா பகுதி போலீசார், உள்ளே பூட்டப்பட்டிருந்த பெண்களை மீட்டு தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாகவே இந்தத் துணிகரக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.