சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி நிலைப்பாடு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டி தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை பரிசீலனையில் இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ், கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் கூறியதாவது: “தேர்தல் காலம் வந்துவிட்டாலே பல்வேறு விதமான யூகங்கள் எழுவது இயல்பு. பல பேச்சுவார்த்தைகள் நடக்கும்; அதில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். அதனை ஊடகங்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றன என்பதில் தான் விஷயம் உள்ளது. இதுவரை பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் என்னிடம் நேரடியாகத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசவில்லை.”
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாமக வெளியேறிவிட்டதா என்ற கேள்விக்கு, “அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆனால் காலம் மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, கூட்டணி குறித்த முடிவை மிக விரைவில் அறிவிப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
புதிய கூட்டணி அமைவதற்கான சூழல் உள்ளதா என்ற கேள்விக்கு, “தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். எதையும் இப்போது உறுதிபடச் சொல்ல முடியாது” என்று புதிராகப் பதிலளித்தார்.
தொடர்ந்து, “திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பது பரிசீலனையில் உள்ளதா?” எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஆமாம்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து அதிர வைத்தார். டாக்டர் ராமதாஸின் இந்த ‘ஆமாம்’ என்ற பதில், தமிழக அரசியலில் பாமகவின் அடுத்தகட்ட நகர்வு திமுகவை நோக்கி இருக்குமோ என்ற பலத்த எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரங்களில் கிளப்பியுள்ளது.
மேலும் அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில் ஒருவேளை ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைந்தால் இது பாமகவில் கண்டிப்பாக வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
