மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில், ஆணவக் கொலை செய்யப்பட்ட தனது காதலனின் சடலத்தைத் திருமணம் செய்து கொண்டு, புகுந்த வீட்டிலேயே வாழ்வதாகச் சபதமேற்ற இளம்பெண், அங்கு ஏற்பட்ட கடுமையான துன்புறுத்தல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்டெட் பகுதியைச் சேர்ந்த சாக்ஷம் ததே என்ற வாலிபரை, ஆஞ்சல் மமித்வார் என்ற இளம்பெண் காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஞ்சலின் தந்தை மற்றும் சகோதரர்களால் சாக்ஷம் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
காதலனின் இறுதிச்சடங்கின் போது அங்கு வந்த ஆஞ்சல், சாக்ஷமின் உடலுக்கு மஞ்சள் பூசி, தனது நெற்றியில் குங்குமம் இட்டு, அவரது சடலத்தையே திருமணம் செய்துகொண்டார். மேலும், சாக்ஷமின் பெற்றோரைத் தனது பெற்றோராக ஏற்று, ஆயுள் முழுவதும் அந்த வீட்டிலேயே வாழப் போவதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.இந்நிலையில், காதலனின் வீட்டில் குடியேறிய சில நாட்களிலேயே ஆஞ்சலுக்குப் புகுந்த வீட்டாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடுமையான மன உளைச்சலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளானதாகத் தெரிகிறது.
சாக்ஷமின் மரணத்திற்குப் பின் அவரது தந்தையின் உடல்நிலையும் மோசமடைந்து காலமானதால், அந்த குடும்பத்தில் மேலும் குழப்பங்கள் நீடித்தன. புகுந்த வீட்டில் தொடர்ந்து வசிக்க முடியாத அளவுக்குச் சூழல் மோசமடைந்ததால், ஆஞ்சல் அங்கிருந்து வெளியேறி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பின் காரணமாக, காவல்துறை அதிகாரிகளின் அனுமதியுடனேயே தான் புகுந்த வீட்டை விட்டு வெளியேறியதாக ஆஞ்சல் விளக்கம் அளித்துள்ளார். மேலும், புகுந்த வீட்டை விட்டுத் தான் பிரிந்தாலும், சாக்ஷம் மீது தான் கொண்ட காதல் எப்போதும் மாறாது என்றும் அந்த இளம்பெண் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
