உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் இருந்து விலங்கினங்களின் எல்லையற்ற தாய் பாசத்தை உணர்த்தும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள ஒரு பகுதியில், குட்டி குரங்கு ஒன்று ஏதோ ஒரு காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆனால், தனது குட்டி இறந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாத அதன் தாய் குரங்கு, குட்டியின் உடலைத் தனது நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறது.

உமேஷ் அவஸ்தி என்பவரால் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தாய் குரங்கு தனது குட்டிக்கு மீண்டும் உயிர் வந்துவிடாதா என்ற ஏக்கத்தில், அதன் உடலைத் தொடர்ந்து நக்கியும், முத்தமிட்டும் எழுப்ப முயல்கிறது. குட்டியின் உடலை யாரிடமும் கொடுக்க மறுத்து அது காட்டும் பாசம், அங்கிருந்த பொதுமக்களைக் கண்ணீர் விட வைத்துள்ளது. “தாயின் அன்பிற்கு எல்லையே இல்லை… இழப்பும் பாசமும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது தான்” என்று இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உருகி வருகின்றனர். இந்த பாசப் போராட்டம் ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும் கனக்கச் செய்துள்ளது.