பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த பரியார்பூர் கிராமத்தில், கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு (48 ஆண்டுகள்) பிரிந்த கணவன்-மனைவி மீண்டும் இணைந்துள்ள நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. லாலன் மிஸ்ரா என்பவருக்கும் நிர்மலா தேவிக்கும் கடந்த 1977-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்துள்ளது. ஆனால், குடும்பத்தினரின் சில தூண்டுதல்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திருமணமான ஆறே மாதத்தில் நிர்மலா தேவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
அதன் பிறகு அவர் கணவர் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. மனைவியின் பிரிவால் மனமுடைந்த லாலன் மிஸ்ரா, தனது நல்ல வேலையையும் துறந்துவிட்டு, வேறு திருமணம் செய்துகொள்ளாமல் தன் வாழ்நாள் முழுவதும் நிர்மலா தேவியின் வருகைக்காகவே காத்துக் கிடந்துள்ளார்.
மறுபுறம், தாய் வீட்டிற்குச் சென்ற நிர்மலா தேவி, தனது தந்தையின் உதவியால் நாக்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்து அங்கேயே வாழத் தொடங்கியுள்ளார். இத்தனை ஆண்டுகள் கழித்து, தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் கணவருடன் வாழ ஆசைப்பட்டு, போலீஸ் நிலையத்தின் உதவியோடு தனது கணவரின் கிராமத்தைக் கண்டுபிடித்து வந்துள்ளார்.
வந்த இடத்தில், தனது கணவருக்கு அடையாளம் காட்டுவதற்காக, திருமணத்தின் போது கையில் குத்திக்கொண்ட கணவரின் பெயரிலான பச்சையை நிர்மலா தேவி காட்டியுள்ளார். 48 ஆண்டுகள் கழித்துத் தனது காதல் மனைவி கண்முன்னே நிற்பதைக் கண்ட லாலன் மிஸ்ரா, அவரைக்கட்டிப்பிடித்துக் கண்ணீர் விட்டு அழுதார். இந்த முதிய தம்பதியின் மறுமிலனம் ஒட்டுமொத்த கிராமத்தையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
