மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பம் எடுத்துள்ள அசாதாரண முடிவு, தற்போது இந்தியா முழுவதும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. புல்கான் பகுதியைச் சேர்ந்த சதீஷ் கௌரிசங்கர் சௌபே என்பவரது மகன் யாஷ் சௌபே (சாஃப்ட்வேர் இன்ஜினியர்). இவருக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், வழக்கம்போல மருமகளுக்குப் புதிய தங்க தாலி வாங்குவது குறித்து குடும்பத்தினர் ஆலோசித்துள்ளனர். அப்போது, சதீஷின் மனைவி சீமா சௌபே ஒரு அதிரடி யோசனையை முன்வைத்துள்ளார். புதிய தங்கம் வாங்குவதற்குப் பதிலாக, தான் அணிந்திருக்கும் தாலியையே பாலிஷ் செய்து, புதுப்பித்து மருமகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த முடிவுக்குப் பின்னால் ஒரு மிக முக்கிய தேசப்பற்று ஒளிந்துள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பொதுமக்கள் ஒரு வருடத்திற்குத் தங்க நகைகள் வாங்குவதையும், வெளிநாட்டுப் பயணங்களையும் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமரின் இந்த வார்த்தைகளால் ஈர்க்கப்பட்ட சௌபே குடும்பத்தினர், நாட்டின் நலனுக்காகப் புதிய தங்கம் வாங்குவதில்லை என்று உறுதியேற்றனர். இந்த முடிவை பிரதமருக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ள சதீஷ், தனது மகனின் திருமணத்திற்கு நேரில் வந்து ஆசி வழங்குமாறும் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேச நலனுக்காக ஆடம்பரத்தைக் குறைத்த இந்த குடும்பத்தின் செயல், பொறுப்புள்ள குடிமகன்களுக்குச் சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.