லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் இளம் ஜோடி ஒன்றுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது. “வீட்டை விட்டு ஓடிப்போய் லிவ்-இன் முறையில் வாழ்வது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமையையும் பறிக்கிறது” என்று நீதிமன்றம் சாடியுள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த இளம் ஜோடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதி சந்தீப் மௌத்கில், “ஒரு ஜோடி சில காலம் ஒன்றாக வாழ்ந்துவிட்டதாலேயே, அதைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட லிவ்-இன் உறவாகக் கருத முடியாது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் 21-ன் படி, கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை பெற்றோருக்கு உண்டு என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இந்திய சமூக அமைப்பில் திருமண பந்தம் என்பது மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கில், மனுதாரர்களான அந்த ஜோடி 18 வயதைக் கடந்திருந்தாலும், இளைஞருக்கு இன்னும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது (21 வயது) பூர்த்தியாகவில்லை. வயது வந்தவுடன் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி, தற்போது பெண்ணின் குடும்பத்தினரால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அவர்கள் பாதுகாப்பு கோரியிருந்தனர். ஆனால், “சட்டத்திற்குட்பட்டே அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியும். இத்தகைய வழக்குகளில் எல்லாம் பாதுகாப்பு வழங்கினால், அது சமூகக் கட்டமைப்பையே சீர்குலைத்துவிடும்” என்று கூறி நீதிமன்றம் பாதுகாப்பிற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என மனுவை தள்ளுபடி செய்தது.
