தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத், தற்போது அண்ணாமலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை முன்னெடுத்துள்ள ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கம் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடையும் என்றும், செப்டம்பர் 15-ல் அண்ணாமலை புதிய அரசியல் கட்சியைத் பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ளார் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.ஜி.சம்பத், திராவிட பாரம்பரியமிக்க ஒரு முக்கியப் பின்னணியைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேரறிஞர் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று, திமுகவிற்கு ‘உதயசூரியன்’ சின்னத்தையே வாங்கிக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் மகன் தான் இந்த ஏ.ஜி.சம்பத் ஆவார். அத்தகைய பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர், தற்போது அண்ணாமலையின் புதிய அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து, கட்சியின் தொடக்க தேதியையும் அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக பாஜக மற்றும் திமுக முகாம்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.