ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் ஜூன் 14 அன்று நடைபெற்ற ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 170 ரன்கள் குவிக்க, அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 106 ரன்களுக்குள் சுருண்டது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி சர்மா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வரலாற்று வெற்றிக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் ஒரு பரபரப்பான வீடியோ தீயாய் பரவி வருகிறது. அதில், மைதானத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் வீராங்கனைகள் ஒருவரையொருவர் கழுத்தைப் பிடித்து ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 10 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Gupta (@foryouvj)

ஆனால், இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த நெட்டிசன்களும் ஏஐ (AI) தொழில்நுட்ப வல்லுநர்களும் இது முற்றிலும் போலியானது என்பதை அம்பலப்படுத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வீடியோ மிக தந்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. உன்னிப்பாகக் கவனித்தால், பாகிஸ்தான் வீராங்கனையின் ஜெர்சியில் ‘பாகிஸ்தான்’ என்ற எழுத்து தலைகீழாக இருப்பதும், இந்திய அணி பேட்டிங் செய்யும்போது கிரீஸில் மூன்று வீராங்கனைகள் நிற்பது போன்ற குளறுபடிகளும் இதில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மேலும், நடுவர் மற்றும் வீராங்கனைகளின் உடல் அசைவுகளும் இயற்கையாக இல்லை. முழுப் போட்டியையும் பார்த்த ரசிகர்கள், “மைதானத்தில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, இது ஏஐ செயலியை வைத்து எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ” என்று நெட்டிசன்கள் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.