ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும், இப்போட்டியின் வெற்றிக்கு இணையாக, போட்டி முடிந்த பிறகு இரு நாட்டு வீராங்கனைகளும் கைகுலுக்கிக் கொள்ளாமல் சென்றது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஆசியக் கோப்பை 2025 தொடரிலிருந்தே இரு அணிகளும் பரஸ்பரம் கைகுலுக்க மறுக்கும் இந்த ‘நோ ஹேண்ட்ஷேக்’ விவகாரம் நீடித்து வருகிறது. நடப்பு உலகக்கோப்பை போட்டியின் டாஸ் போடும் நிகழ்வின் போது கூட, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாமல் தத்தமது வழியில் சென்றது மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வஹாப் ரியாஸிடம், இரு அணிகளுக்கும் இடையே ஏன் கைகுலுக்கல் நடக்கவில்லை என்றும், மைதானத்திற்கு வெளியே வீராங்கனைகளுக்குள் நட்பு இருக்கிறதா அல்லது பதற்றம் நீடிக்கிறதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வஹாப் ரியாஸ், “பாருங்கள், எனக்கு இதைப் பற்றி அதிகம் தெரியாது. நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டன.
எனவே, அவர்கள் ஏன் கைகுலுக்கிக் கொள்வதில்லை என்பதற்கான துல்லியமான காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் விஷயங்கள் இப்படித்தான் போகப் போகிறது என்றால், அப்படியே போகட்டும்; இதனால் பெரிய வித்தியாசம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். மேலும், கடைசி இரண்டு ஓவர்களில் பில்டிங் கட்டுப்பாடுகளால் தலா 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக விட்டுக்கொடுத்ததே தங்களின் தோல்விக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
