“நள்ளிரவு நேரத்தில் மொபைலுக்கு வந்த அந்த ஒரு மெசேஜை பார்த்துட்டு காலையில பேங்க் அக்கவுண்ட்டை செக் பண்ணா மொத்தப் பணமும் திருடப்பட்டிருக்கு!” என்று சொல்லும் அளவுக்கு, அடையாளம் தெரியாத கைபேசி எண்ணிலிருந்து வந்த திருமண அழைப்பிதழ் இணைப்பை நம்பித் திறந்த புனே தொழிலதிபர் ஒருவர், லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே‌ சாலைப் பகுதியில் வசித்து வரும் 56 வயதான பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு, கடந்த மாதம் அடையாளம் தெரியாத எண் ஒன்றிலிருந்து ஒரு திருமண அழைப்பிதழ் லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. அதை அவர் சாதாரணமாக நினைத்துத் திறந்த நிலையில், மறுநாள் நள்ளிரவில்‌ அவரது கைபேசிக்கு  மோசடி தொடர்பான ஒரு குறுஞ்செய்தியும், அதைத் தொடர்ந்து ஒரு ஓடிபி எண்களும் வந்துள்ளன.

அடுத்த சில நிமிடங்களிலேயே, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 5 லட்சத்து 30 ஆயிரம் ஆன்லைன் மூலமாகத் திருடப்பட்டு வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டிருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில்,  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்க்குகள் அல்லது ஏபிகே‌ கோப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும், வங்கித் தகவல்களையோ ஓடிபி எண்களையோ யாருக்கும் பகிரக் கூடாது என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.