மத்திய பிரதேச மாநிலம் ஷட்டோல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவரை, இன்ஸ்டாகிராம் மூலம் போலி முகவரி காட்டி வாலிபர் ஒருவர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். குவாலியர் பகுதியைச் சேர்ந்த கரண் தானுக் என்ற அந்த வாலிபர், சுவர்களில் புட்டி மற்றும் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பெரிய பெரிய சொகுசு பங்களாக்களுக்கு வேலைக்குச் செல்லும்போது, அங்கு சொகுசான பின்னணியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, தன்னை ஒரு பெரிய கோடீஸ்வரர் போல காட்டி ‘கரண் ராஜ்புத்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த போலி ஆடம்பர வாழ்க்கையை உண்மை என்று நம்பிய முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி, அவனுடன் பழகத் தொடங்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த வாலிபர் ரகசியமாக  மாணவியை ஆசை வார்த்தைகள் கூறித் தன்னுடன் கடத்திச் சென்றுள்ளார்.

மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஜெய்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் மற்றும் மொபைல் சிக்னல் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே, மொரினா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாணவி அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது.

அங்கு விரைந்த தனிப்படை போலீசார், மாணவியை பத்திரமாக மீட்டனர். ஆனால், போலீஸ் வருவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த பெயிண்டர் கரண் தானுக் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். மீட்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தலைமறைவான வாலிபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமூக வலைத்தள மோகத்தால் நடந்த இந்த ஏமாற்றுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.