பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவ மீனா, மனோஜ் ஆகியோர் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, ஏ.டி.எம் கார்டு, ஓடிபி எண் ஆகிய விவரங்களை யாருக்கும் பகிரக்கூடாது. கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், கிரிப்டோ கரன்சி மோசடி, செல்போன் டவர் வைப்பது, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, பரிசு பொருள் கிடைப்பதாக கூறுவதை நம்புவது போன்றவை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஏதாவது மோசடி வேலைகள் நடந்தால் சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ உடனடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அப்படி இல்லை என்றால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.