ஃபைவ் ஐஸ்  உளவுத்துறை நாடுகளின் அறிக்கையின்படி, சீனா தனது உளவு வலையமைப்பை வலுப்படுத்துவதற்காக லிங்க்ட்இன் போன்ற வேலைவாய்ப்பு இணையதளங்கள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் குறிவைத்து ஆட்களைச் சேர்த்து வருகிறது.

குறிப்பாக, பிரிட்டனில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட நபர்களைச் சீன உளவு முகவர்கள் தொடர்பு கொண்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அரசு மற்றும் இராணுவப் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தளங்களில் முன்னுரிமை கொடுத்து, நேர்காணல்கள் என்ற பெயரில் அவர்கள் உளவு வேலைகளுக்குத் தூண்டப்படுகிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் சீனாவுக்காக உளவு பார்த்ததாக 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் கலிபோர்னியா மேயர் ஒருவரும் இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீன உளவு அமைப்பில் சுமார் 6,000,000 பேர் வரை பணியாற்றலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் 2012-ல் பதவிக்கு வந்தபோதே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை உளவுத்துறையில் முந்த வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டத்தைத் தீவிரப்படுத்தியதாக முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி ஜிம் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

சீன உளவுத்துறையின் அச்சுறுத்தல் எந்தளவுக்கு உள்ளது என்றால், அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட கைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

மேலும், அங்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் அனைத்தும் உளவு பார்க்கும் கருவிகள் இருக்கலாம் என்ற அச்சத்தால் சீனாவிலேயே விட்டு வரப்பட்டன.

இதனால், சீனாவிடமிருந்து வரும் இந்த உளவு அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் தங்களது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.