லாகூர் கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் மஸ் சதாக்கத் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 10-வது ஓவரில், மார்னஸ் லாபுஷேன் அடித்த பந்தை பவுண்டரி கோட்டிற்கு அருகே முழு வேகத்தில் ஓடித் தடுக்க முயன்றபோது அவர் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது அவரது தலை தரையில் பலமாக மோதியதுடன், அங்கிருந்த விளம்பரப் பலகையிலும் அவர் மோதினார்.

இதனால் பலத்த காயமடைந்த அவர் நீண்ட நேரம் எழ முடியாமல் மைதானத்திலேயே சரிந்து கிடந்ததால், சக வீரர்களும் ரசிகர்களும் பெரும் கவலையடைந்தனர். உடனடியாக மருத்துவக் குழுவினர் களத்திற்கு வந்து முதற்கட்ட சிகிச்சை அளித்த பின், அவர் மற்றவர்களின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

21 வயதான மஸ் சதாக்கத்திற்கு இந்தத் தொடர் ஏற்கனவே ஃபார்ம் அவுட் காரணமாகக் கடினமாக இருந்த நிலையில், தற்போதைய காயம் அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரது காயத்தின் தீவிரம் மற்றும் மூளையதிர்ச்சி பாதிப்பு குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

“>

 

இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை என்றாலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஜோஷ் இங்லிஸும், பாகிஸ்தான் அணியை ஷஹீன் அப்ரிடியும் வழிநடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.