ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் மகளிர் பிரீமியர் கோப்பை 2026 போட்டியில், பூட்டான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது நேபாள வீராங்கனைகள் ‘டைம்ட்-அவுட்’ முறையில் விக்கெட் எடுத்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டான் அணியின் ரன் சேசிங்கின் போது, முதல் பந்திலேயே ஒரு விக்கெட் விழுந்த நிலையில், அடுத்ததாக களம் இறங்க வேண்டிய ரிட்ஷி சோடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கிரீஸிற்கு வரத் தவறியதால் நடுவரால் அவுட் என அறிவிக்கப்பட்டார்.
இதனால் பூட்டான் அணி ஒரே ஒரு பந்தில், ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த முறையில் ஒரு வீராங்கனை ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை என்பதால், இது கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டது என்றாலும் ‘விளையாட்டு தர்மத்திற்கு’ எதிரானது எனப் பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நேபாள கிரிக்கெட் சங்கம் வியாழக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாகப் பொது மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த விக்கெட் கிரிக்கெட் விதிகளின்படி எடுக்கப்பட்டது என்றாலும், எழுதப்பட்ட விதிகளைத் தாண்டி விளையாட்டு தர்மமே எப்போதும் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்று நேபாள கிரிக்கெட் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
— CAN (@CricketNep) June 4, 2026
“>
இந்தச் சம்பவம் தங்களின் கிரிக்கெட் வாரியம் போற்றும் விளையாட்டு மதிப்புகளுக்கு எதிரானது என்றும், இதனால் பூட்டான் கிரிக்கெட் வாரியத்திற்கும், பாதிக்கப்பட்ட வீராங்கனைக்கும், ரசிகர்களுக்கும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நேபாள கிரிக்கெட் சங்கம் உருக்கமாகக் கூறியுள்ளது.
