ஐபிஎல் 2026 தொடரில் அதிரடி காட்டிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைக் காண்பதற்காக இலங்கையில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் திரண்டனர். முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக திலக் வர்மா தலைமையிலான இந்தியா ‘ஏ’ அணி வெள்ளிக்கிழமை இலங்கை சென்றடைந்தது. அப்போது விமான நிலையத்திற்கு வெளியே வந்த வைபவ் சூர்யவன்ஷியுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ரியான் பராக் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளின் அட்டவணை மற்றும் அணி விவரங்களை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இறுதி செய்துள்ளார்.
Vaibhav Sooryavanshi arrived in Sri Lanka. pic.twitter.com/fYnzW4pMaC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 5, 2026
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு எதிரான இந்த முத்தரப்பு தொடரில், ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளன. இந்திய அணியின் முதல் ஆட்டம் ஜூன் 9-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு, போட்டியை நடத்தும் இலங்கை ‘ஏ’ அணியுடன் தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 11-ல் ஆப்கானிஸ்தான், ஜூன் 15-ல் மீண்டும் இலங்கை, ஜூன் 17-ல் மீண்டும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இந்தியா மோதுகிறது. இந்த விறுவிறுப்பான போட்டிகளை ‘சோனி ஸ்போர்ட்ஸ்’ நெட்வொர்க் தொலைக்காட்சிகளிலும், ஆன்லைனில் ‘சோனி லிவ்’ செயலியிலும் ரசிகர்கள் நேரலையாகக் கண்டு ரசிக்கலாம்.
