திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது தற்போதைய ஆட்சி முறை குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலைக் கண்டு திமுகவின் அருள்மொழி மற்றும் தமிழன் பிரசன்னா ஆகியோர் கோபப்படுவதும் வருத்தப்படுவதும் நியாயம்தான் எனக் குறிப்பிட்ட ஆ.ராசா, “நாமாவது ஒரு அறிவாளியிடமோ அல்லது கொள்கையாளரிடமோ தோற்றால் பரவாயில்லை, ஆனால் இப்படிப்பட்டவர்களிடமா தோற்பது என்று வேதனை தெரிவித்தார்.
மேலும், ‘நான் கோட்டு போடக்கூடாதா, சூட்டு போடக்கூடாதா?’ என்று தவெக தரப்பினர் பேசுவதை விமர்சித்த அவர், “யாரையா உன்னை வேண்டாம் என்று சொன்னது? நீ சினிமாவில் கோட்டு போட்டு நடித்துவிட்டு, இங்கேயும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறாய்” என்று மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார். அம்பேத்கர் ஏன் சூட்டு போட்டார், காந்தி ஏன் கோவணம் கட்டினார் என்ற அரசியல் பின்னணியை விளக்கிய ஆ.ராசா, “அன்று கோவணம் கட்டியிருந்த என் சமூகம் இன்று கல்வி கற்று கோட்டு போடுவது எங்கள் உரிமை மற்றும் ஸ்டைல்; ஆனால் நீ நடிப்பதே கோட்டு போட்டுத்தான், சினிமாவில் கோட்டு சூட்டு போட்டு நடிப்பவர்களுக்கெல்லாம் நாம் ஏன் பொறாமைப்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“பேசிப் பேசியே வளர்ந்த தமிழ்நாட்டு அரசியலில், பேசவே தெரியாத ஒரு ஆள் முதலமைச்சராக அமர்ந்திருக்கிறார்” என்று தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் மௌனத்தைக் கிண்டல் செய்த அவர், “இனி வருகிற குழந்தைகளாவது விழித்துக் கொண்டு, தற்போதைய இந்த போலியான ஆட்சி மாற்றத்தைத் தகர்த்து, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் பொன்னான நாளை உருவாக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும்” என்று திமுக தொண்டர்களுக்கு அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.
