சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், புதிய ஆளுங்கட்சியான தவெக அரசின் அமைச்சரவையை மிகக் கடுமையாகக் கிண்டல் செய்து வறுத்தெடுத்துள்ளார். “இந்த புதிய ஆட்சியில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்குத் தங்களுக்கு எந்த இலாக்கா ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றே தெரியவில்லை; ஒரு அமைச்சர் பத்திரிகையாளர்களிடம் போய், ‘நான் சுற்றுச்சூழல் அமைச்சரா இல்லை சுற்றுலாத் துறை அமைச்சரா?’ என்று கேட்கும் அளவுக்குத் தான் இவர்களின் லட்சணம் இருக்கிறது” என்று சாடிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட ஆட்சியை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? என்று ஓப்பனாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

​மேலும் தவெக-வின் புதிய ஆளுங்கட்சியைப் பழமொழிகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்த அவர், “ஒரு கோமாளி அரண்மனைக்கு போவதால் அவன் அரசன் ஆகிவிட முடியாது, அந்த அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும் என்று சொல்வார்கள், இன்று தமிழ்நாட்டில் அதுதான் கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கிறது” என்று அதிரடி காட்டினார். “ரம்மியில் 13 ஜோக்கர் வந்தால் என்ன செய்வார்களோ, அந்த நிலைமையில் தான் இந்த ‘சோபா மாடல்’ அரசு நடந்து கொண்டிருக்கிறது” என்று ஆளுங்கட்சியான விஜய் அமைச்சரவையின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாகச் சர்க்கஸ் கூடாரத்தோடு ஒப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ள இந்த பேச்சு, தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.