பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள மாதா பத்ரகாளி கோயில் அருகே, குழந்தையை கையில் வைத்திருந்த பெண் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதாக வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் வாசலில் குழந்தைகளுடன் இருந்த பெண்ணை ஒருவர் செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவத்துக்கு மோட்டார் சைக்கிளின் கண்ணாடியை குழந்தை தொட்டது தொடர்பான தகராறே காரணம் என கூறப்படுகிறது. குழந்தை தற்செயலாக கண்ணாடியைத் தொட்டதாகவும், அதை உடனே சரிசெய்துவிட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையை திட்டியதாகவும், அதைத் தடுக்க முயன்ற தாயிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கையில் ஒரு வயது குழந்தையை வைத்திருந்த நிலையிலும் அந்தப் பெண்ணை செருப்பாலும் காலாலும் தாக்கியதாக அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெண்கள் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட கடைக்காரரின் தந்தை உள்ளிட்ட சிலர் தங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டியதாகவும், ரூ.20 ஆயிரம் கொடுத்து பிரச்சினையை முடித்துக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
