பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் மதுபான கடையில் மணி(46) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கடையை திறந்து விற்பனை செய்து கொண்டிருந்த போது அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இன்னாச்சி என்பவர் மதுபானம் வாங்கிக் கொண்டு கூகுள் பே மூலமாக பணம் செலுத்தலாமா? என கேட்டுள்ளார். அதற்கு மணி அந்த வசதி எங்களிடம் இல்லை எனக் கூறியுள்ளார். அதற்கு எல்லா கடைகளிலும் கூகுள் பே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் உங்கள் கடையில் மட்டும் ஏன் பயன்படுத்தவில்லை? என கூறி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மதுபான கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மணியை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் படுகாயமடைந்த மணி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் இன்னாச்சியை தீவிரமாக தேடி வருகின்றனர்.