துருக்கியின் ஷான்லூர்பா மாகாணம், விரான்ஷெஹிர் மாவட்டத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர், பாதுகாப்பற்ற முறையில் திறந்து வைக்கப்பட்டிருந்த மின்சாரப் பெட்டியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். இந்த நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் சம்பவம் அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சாதாரணமாகத் தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், எதிர்பாராத விதமாகத் திறந்து கிடந்த மின்சாரப் பெட்டியின் மீது கையை வைத்துள்ளார். அடுத்த நொடியே மின்சாரம் பாய்ந்ததில் அந்தச் சிறுவன் தூக்கி வீசப்பட்டுக் கையில் பலத்த காயமடைந்துள்ளார்.

 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொது இடங்களில் இதுபோன்ற மின்சாரப் பெட்டிகளைப் பாதுகாப்பற்ற முறையில் திறந்து வைத்திருப்பதே விபத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அதிகாரிகளின் அஜாக்கிரதைக்கு எதிராகக் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.