மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்டத்தில் உள்ள நவதீப் மயானத்தில் சுற்றியிருந்த அனைவரையும் உறைய வைக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வங்கதேச எல்லைப் பகுதியான கேடே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கிற்காகக் குடும்பத்தினர் உடலை நவதீப் மயானத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு முறைப்படி உடலை மின் மயானத்தின் இரும்பு டிராலியில் வைத்து உலைக்குள் அனுப்பும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது, எதிர்பாராதவிதமாக இறந்த மூதாட்டி 30 வயதான பேரன் இந்திரஜித் பிஸ்வாஸ் என்பவர், அங்கு நின்றிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், இயங்கத் தொடங்கிய டிராலியில் இருந்த பாட்டியின் சடலத்தின் மீது திடீரெனப் பாய்ந்து உலைக்குள் சென்றார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் மயான வளாகமே அலறல் சத்தத்தாலும் பீதியினாலும் உறைந்துபோனது.

சூழலின் தீவிரத்தை உணர்ந்த மயான ஊழியர்களும் உறவினர்களும் சற்றும் தாமதிக்காமல், தங்களது உயிரைப் பணையம் வைத்து விரைந்து சென்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த உலையின் அருகிலிருந்த இந்திரஜித்தை மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வெளியே இழுத்து மீட்டனர். எனினும், உலையின் கடும் வெப்பம் காரணமாக அவரது முகம், கண்கள் மற்றும் உடலின் சில பகுதிகள் தீக்காயங்களுக்கு உள்ளாகின.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக மீட்கப்பட்ட அவர் நவதீப் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய கொடூரமான முடிவை அவர் எடுத்ததற்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பாட்டியின் இறப்பினால் ஏற்பட்ட ஆழ்ந்த மன உளைச்சல் காரணமாக அவர் இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சம்பவத்தின் போது அவர் கடுமையான போதையில் இருந்ததாகவும் அங்கிருந்த சிலர் தெரிவிக்கின்றனர்.