கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிம்மதியளிக்கும் விதமாக, சுமார் 800 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 67,000 கோடி) மதிப்பிலான நிதிச் சலுகைகளைச் சவூதி அரேபியா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு, சவூதி அரேபியாவிடம் வாங்கியிருந்த 350 கோடி டாலர் கடனை நடப்பு மாதத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைவாக உள்ள சூழலில், இந்தக் கடனை அடைப்பது பெரும் சவாலாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 500 கோடி டாலர் நிதிக்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாகச் சவூதி அரேபியா அதிரடியாக அறிவித்துள்ளது. இது பாகிஸ்தான் அரசுக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உடனடியாக உயர்த்தும் நோக்கில், அந்நாட்டு மத்திய வங்கியில் கூடுதலாக 300 கோடி டாலரை வைப்புத் தொகையாக வழங்கவும் சவூதி அரேபியா முன்வந்துள்ளது. சவூதியின் இந்த இரட்டை உதவி, பாகிஸ்தானின் பொருளாதார அழுத்தத்தைச் சற்றே குறைத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், நிதி திரட்டும் முயற்சியாக சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்டுள்ளார். அவர் சவூதி சென்றடைந்த சில மணிநேரங்களிலேயே இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க பாகிஸ்தான் அரசு கடன்பத்திரங்களை (Bonds) வெளியிடத் திட்டமிட்டுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கூடுதல் நிதியுதவி கோருவது குறித்தும் அந்நாட்டு நிதி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
மேலும் சவூதி அரேபியாவின் இந்தச் செயல், திவாலாகும் நிலையில் இருந்த பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு ஒரு ‘லைஃப் சப்போர்ட்’ போல அமைந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
