காய்கறி விற்று படித்து, கடின உழைப்பால் யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐபிஎஸ் அதிகாரியான உதய் கிருஷ்ணா ரெட்டி, சக பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை அகாடமியில் பயிற்சி பெற்று வந்த இவரைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் காவல்துறையின் ரிமாண்ட் அறிக்கையில் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு சமூக வலைத்தளம் மூலமாக இவர்களுக்கிடையேயான பழக்கம் ஏற்பட்டுள்ளது. உதய் கிருஷ்ணாவின் பின்னணியைக் கண்டு அனுதாபப்பட்ட, அவரை விட ஒரு வயது  மூத்தவரான அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரியுடன் அவருக்குக் காதல் மலர்ந்துள்ளது.

இருப்பினும், அகாடமியில் பயிற்சி பெறும் காலக்கட்டத்தில் உதய் கிருஷ்ணாவின் நடவடிக்கைகளில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவது, அளவுக்கு அதிகமாக உரிமை கொண்டாடுவது போன்ற அவரது செயலால் அந்தப் பெண் அதிகாரி அவருடன் பழகுவதைத் தவிர்த்துள்ளார். ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற உதய் கிருஷ்ணா, அந்தப் பெண் அதிகாரியின் மடிக்கணினியை அடித்து உடைத்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அவர், முற்றிலுமாகத் தொடர்பைத் துண்டித்துவிட்டு வேறு ஒருவரையும் திருமணம் செய்துகொண்டார்.

ஆனாலும் தனது பிடியை விட்டுக் கொடுக்காத உதய் கிருஷ்ணா, போலி கணக்குகளைத் தொடங்கி அவதூறு பரப்புவதாகவும், தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாகவும் கூறி தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரையும் நண்பர்களையும் தேடிச் சென்று தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அதிரடி காட்டிய காவல்துறையினர், அசோக் நகரில் உள்ள உதய் கிருஷ்ணாவின் வசிப்பிடத்தில் சோதனை நடத்தி அவரது கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினியைப் பறிமுதல் செய்தனர். அவர் நடத்தி வந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்தைப் பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் தடயங்களைச் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ள காவல்துறையினர், ஒரு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பயிற்சி அதிகாரியே சக அதிகாரியை மிரட்டிய இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.