குருகிராம் நகரைச் சேர்ந்த Food Content Creator பிரியா, சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார். தான் வீட்டில் கபே பாணியில் சிறப்பான முறையில் சமையல் செய்யும்போதெல்லாம், தனது கணவர் தனக்கு 1,000 ரூபாய் தருவதாக அவர் வெளியிட்ட ஒரு வீடியோவே இந்த விவாதத்திற்குக் காரணமாகும். இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், ஒரு தரப்பினர் இதனைச் சுவாரசியமான யோசனையாகப் பாராட்டிய போதினும், மற்றொரு தரப்பினர் தம்பதியரிடையேயான உறவை பணத்துடன் ஒப்பிடுவது சரியல்ல என்று விமர்சித்து வந்தனர். இந்தத் தீவிர விவாதத்தைத் தொடர்ந்து, பிரியா தனது தரப்பு விளக்கத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
தங்கள் மீது எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிரியா, மக்கள் தனது பேச்சைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். கணவரிடம் இருந்து பெறும் இந்தத் தொகையானது உணவை விற்கும் வியாபாரம் அல்ல என்றும், மாறாக அந்தச் சிறப்பான உணவைத் தயாரிக்கத் தேவைப்படும் கடின உழைப்பு, நேரம் மற்றும் படைப்பாற்றலுக்கான பாராட்டு என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சாதாரணமான வீட்டுச் சமையலுக்கும், கபே பாணி சுவை மற்றும் அலங்காரத்துடன் கூடிய உணவுத் தயாரிப்புக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதற்கு முன்கூட்டியே திட்டமிடல், தேவையான பொருட்களை வாங்குவது, சமைப்பது மற்றும் நேர்த்தியாகப் பரிமாறுவது எனப் பல கட்டப் பணிகள் அடங்கியுள்ளன.
View this post on Instagram
இந்த விசித்திரமான மற்றும் சுவாரசியமான பழக்கம் ஒரு சிறிய நகைச்சுவையில் இருந்துதான் தொடங்கியது. ஒருநாள் இருவரும் வீட்டுப் பொறுப்புகளைப் பகிர்வது குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, தான் தயாரிக்கும் கபே பாணி உணவுக்கு ஏதேனும் மதிப்பு இருக்க வேண்டும் என்று பிரியா நகைச்சுவையாகக் கூறினார். இதற்குப் பதிலளித்த அவரது கணவர், வெளியே இதுபோன்ற உணவை உட்கொண்டால் அதிகப்படியான தொகையைச் செலவிட நேரிடும் என்பதால், அந்தப் பணத்தை வெளி நபர்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாகத் தனது மனைவியின் உழைப்புக்கு வழங்குவதே சிறந்தது என்று தெரிவித்தார். இந்த ஜாலி பாணி விவாதம் நாளுக்கு நாள் வழக்கமாக மாறி, தற்போது இதன் மூலம் அவருக்கு மாதந்தோறும் கணிசமான தொகை கிடைத்து வருகிறது.
சண்டிகரைச் சேர்ந்த பிரியா, ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டுத் தனது சொந்த ஆடை பிராண்டை நடத்தி வந்தவர். திருமணத்திற்குப் பிறகு 2023ஆம் ஆண்டில் குருகிராமிற்குக் குடிபெயர்ந்த அவர், உணவு சார்ந்த படைப்புகளை உருவாக்குவதைத் தனது முழுநேரத் தொழிலாக மாற்றிக் கொண்டார். இந்த நடைமுறையால் குடும்பத்திற்கு இரட்டை லாபம் கிடைப்பதாக அவர் கூறுகிறார். வெளியில் சென்று ஆரோக்கியமற்ற உணவுகளில் அதிகப் பணத்தைச் செலவிடுவதைத் தவிர்ப்பதுடன், குடும்பத்தினருக்குச் சுவையான மற்றும் சுகாதாரமான உணவு சொந்தச் செலவின்றி கிடைப்பதாக அவர் குறிப்பிடுகிறார். எந்தவொரு உறவிலும் ஒருவரின் உழைப்பை மதிப்பதும் மரியாதை அளிப்பதும் மட்டுமே மிக முக்கியமானது என்பதே இதன் அடிப்படை என்கிறார்கள்.
