
பாலிவுட் வில்லன் நடிகரான சோனு சூட், கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா பரவல் ஆரம்பித்த சமயத்திலிருந்து சுமார் 2 வருடங்கள் வரை அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் பலருக்கும் போக்குவரத்து, உணவு, கல்வி, மருத்துவம், விவசாயம் என வெவ்வேறு விதமான உதவிகளை வழங்கினார்.
இதனால் பொதுமக்கள் அவரை ரியல் ஹீரோவாகவே போற்றி புகழ்ந்துதள்ள ஆரம்பித்துவிட்டனர். மேலும் ஒரு படி மேலே சென்று அவருக்காக மிகப் பெரிய சிலைகள் அமைப்பதும், சில இடங்களில் அவருக்காக கோவில் கட்டவும் ஆரம்பித்தனர். அதன்படி தெலங்கானா மாநிலத்திலுள்ள சித்திபேடில் அவருக்காக ரசிகர்களால் கட்டப்பட்டிருந்த கோவிலுக்கு அண்மையில் வருகை தந்தார் சோனு சூட். அப்போது அவர் பேசியதாவது “எனக்கு இதில் உடன்பாடு இல்லை.
நான் அந்த அளவிற்கு தகுதியானவனும் இல்லை. மக்களை சந்திப்பதற்காகதான் தற்போது கூட நான் வந்தேன். என் மீது அன்புகொண்டவர்கள் அதனை வெளிப்படுத்த வேண்டும் எனில் கோவிலுக்கு பதில் பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் கட்டினால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு செய்தால் நானும் பெருமைப்படுவேன்” என்று சோனு சூட் கூறியுள்ளார்.