தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களை நேரில் சந்தித்த பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன், டாஸ்மாக் கடைகள் தொடர்பாக ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு வித்தியாசமான மற்றும் அதிரடியான ஆலோசனையை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு மாற்றாக மதுக்கடைகளை ஊருக்குள் வைக்காமல், ஒதுக்குப்புறமாக இருக்கும் சுடுகாடுகளுக்கு அருகே அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பார்த்திபனின் இந்த அல்டிமேட் ஐடியா தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுடுகாடு அருகே டாஸ்மாக் அமைப்பது குறித்து பார்த்திபன் தனது பாணியில் விளக்குகையில், “டாஸ்மாக் கடைகளை சுடுகாடு அருகே அமைப்பது குடிப்பவர்களுக்கு ஒரு பலமான ‘சைக்கலாஜிக்கல்’ (உளவியல்) எச்சரிக்கையாக இருக்கும். மனிதர்களாகிய நாம் கடைசியாக வந்து சேரப்போகும் இடத்திற்கு, மது குடிப்பதன் மூலம் இப்போதே முன்கூட்டியே வருகிறோமே என்ற பயமும் எண்ணமும் குடிப்பவர்களின் மனதில் தானாகவே தோன்றும். இவ்வாறு செய்வதன் மூலம் அரசுக்கு வர வேண்டிய டாஸ்மாக் வருமானமும் கெடாது; அதே நேரத்தில் ஊருக்குள் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையற்ற சண்டைகளும், அராஜகங்களும் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும்” என்று தனது ‘புதிய பாதை’ ஸ்டைலில் தெரிவித்துள்ளார்.
