மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனை வளாகமான இந்தூரின் எம்.ஒய் மருத்துவமனையில், 12 வயது சிறுவன் ஆதர்ஷ் என்பவனின் பெற்றோர் தங்களின் நோய்வாய்ப்பட்ட மகனுக்காக வார்டு பாய் மற்றும் ஆம்புலன்ஸாக மாற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தண்டுவடம் சார்ந்த பிரச்சனைக்காகச் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுவன், மேல் சிகிச்சைக்காகச் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், அங்குச் சென்றபோது சிறுவனை அனுமதிக்கத் தேவையில்லை என்றும், ஆவணங்களை மட்டும் பரிசோதித்தால் போதும் என்றும் அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், வேறு வழியின்றி கொளுத்தும் வெயிலில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அந்தச் சிறுவனின் தந்தை ஸ்ட்ரெச்சரை இழுக்க, தாய் தனது துணியைத் தண்ணீரில் நனைத்துச் சிறுவனின் மேல் போட்டு வெயிலில் இருந்து பாதுகாத்தவாறு மீண்டும் எம்.ஒய் மருத்துவமனைக்கே அழைத்து வந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.ஒய் மருத்துவமனையில் இதுபோன்ற நோயாளிகள் அவதிப்படும் சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பும் 2026 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நோயாளிகளை அவர்களது உறவினர்களே ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் செல்லும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
மேலும், கடந்த ஜனவரி மாதம் ஐவி காஸ்ட்ரோவை அகற்றும் போது ஒரு கைக்குழந்தையின் கட்டைவிரலைச் செவிலியர் துண்டித்ததும், அதற்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இரண்டு புதுப் பிறந்த குழந்தைகளை எலிகள் கடித்த அதிர்ச்சிச் சம்பவங்களும் இங்கு நடந்துள்ளன.
வெளிஆட்களைக் கொண்டு மருத்துவமனைப் பராமரிப்பிற்காகக் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டாலும், முறையான ஊழியர்களோ, உதவியாளர்களோ இல்லாததால் ஏழை எளிய குடும்பங்கள் இதுபோன்று தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
