பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு – இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் இளைய மகள் அனந்திகா, கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பர நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தபோது தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான மற்றும் சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ‘வாரிசு’ படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யை முதன்முதலில் சந்திக்கச் சென்றபோது, தான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிடுவேன் என்பதால், அங்கு அழுது வம்பில் மாட்டிவிடக் கூடாது என்று தனது தாய் குஷ்பு தன்னிடம் முன்கூட்டியே அறிவுறுத்தி அழைத்துச் சென்றதாக அனந்திகா தெரிவித்துள்ளார். இருப்பினும், விஜய்யை நேரில் பார்த்த அடுத்த நிமிடமே தம்மையும் அறியாமல் அழுதுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சமீபத்தில் தனது அக்காவின் திருமணப் பத்திரிகையை முதலமைச்சர் விஜய்யிடம் வழங்குவதற்காகச் சென்றபோதும் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இம்முறை சந்திப்புக்குச் செல்லும் முன்பாக, “அங்கு சென்று அழுதுவிடக் கூடாது” எனத் தனது தாய் குஷ்பு மற்றும் தந்தை சுந்தர் சி ஆகிய இருவருமே தன்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டதாக அனந்திகா கூறியுள்ளார். பெற்றோருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தின்படி, சுமார் 15 நிமிடங்கள் நீடித்த அந்தச் சந்திப்பில் தான் அழாமல், முதலமைச்சர் விஜய்யைப் பார்த்துத் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்ததாகவும், இதனால் பயந்துபோன தனது அக்கா தம்மைக் கண்டித்ததாகவும் அனந்திகா நகைச்சுவையுடன் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் மிகவும் இனிமையானவர் என்றும் அவர் தனது பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.