தமிழகத்தில் ஆவணப் பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் தங்களது ஆவணங்களை இணையவழியாகப் பதிவு செய்யும் “வருகை இல்லா ஆவணப்பதிவு” முறையைத் தமிழக பத்திரப் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் முறையின் மூலம் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், வருடத்தின் 365 நாட்களும், 24 மணி நேரமும் தங்களது ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆவணப் பதிவிற்குச் சார்பதிவாளர் ஆன்லைனிலேயே ஒப்புதல் அளித்ததும், அவரது மின்னணு கையொப்பத்துடன் கூடிய அசல் ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்-அப் எண்ணிற்கும், இணையதள உள்நுழைவிற்கும் (Login) நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதனை ஆவணதாரர்கள் மிக எளிதாகத் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். இந்த முறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளதால், இதற்கான புதிய நெறிமுறைகளைத் தமிழக பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய நடைமுறையின் கீழ், முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் மற்றும் வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்களைச் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது லாகின் மூலம் இந்த ஆவணங்களை உருவாக்கிச் சமர்ப்பிக்கலாம்.

இம்முறையில் ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் என அனைவருடைய ஆதார் அட்டையையும் இணையதளத்தில் மேலேற்றம் (Upload) செய்ய வேண்டும். மேலும், UIDAI அங்கீகரித்த எல்1 கைரேகை இயந்திரம், கருவிழிப் படலம் கவரும் கருவி மற்றும் வெப்கேம் (Webcam) போன்ற தொழில்நுட்பக் கருவிகள் மூலம் ஆதார் சரிபார்ப்பு மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனிலேயே துல்லியமாகப் பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.