வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நோக்கம் காலாவதியான ஒரு கனவு என்று சாடியுள்ள அவர், வடகொரியா தனது அணுஆயுதத் திறனைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் உறுதியளித்துள்ளார்.
வடகொரியா ஒரு அணுஆயுத நாடு என்ற யதார்த்தத்தை யாராலும் மாற்ற முடியாது என்றும், டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வடகொரியாவின் அணுஆயுத ஒழிப்பு குறித்துப் பேசியதாக அமெரிக்கா கூறுவது முற்றிலும் பொய் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவும் தென்கொரியாவும் தொடர்ந்து ஆயுதங்களைக் குவித்து வருவதால், தற்காப்பிற்காக அணுஆயுதப் படையைப் பெருக்குவதே தங்களின் இறுதி முடிவு என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக வடகொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்குச் சரியாக ஒரு நாளைக்கு முன்பு கிம் யோ ஜோங்கின் இந்த அதிரடி அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததில் இருந்தே வடகொரியா தனது அணுஆயுத மற்றும் ஏவுகணைத் திறனைத் தீவிரமாக அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் அணுஆயுத உற்பத்தி நிலையத்தைப் பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் அணுஆயுத சக்தியை அதிவேகமாக விரிவுபடுத்தப் போவதாகத் தெரிவித்ததுடன், ஏவுகணை உற்பத்தித் திறனை 2.5 மடங்கு அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் தங்களை ஒரு அணுஆயுத நாடாக அங்கீகரிக்கச் செய்வதன் மூலம், தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த முடியும் என வடகொரியா நம்புவதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
