இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய அன்றாட உணவான வெண்டைக்காய், அமெரிக்காவுக்குச் சென்றதும் ஒரு பிரீமியம் ஹெல்த் ஸ்நாக்காக மாறி விற்கப்படும் விசித்திரத்தை இந்தியக் கிரியேட்டர் ஆஷிஷ் அஹுஜா என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்ற அவர், அங்கு 85 கிராம் எடைகொண்ட கிரிஸ்பி வெண்டைக்காய் சிப்ஸ் பாக்கெட் 6.50 டாலருக்கு இந்திய மதிப்பில் சுமார் 600 ரூபாய் விற்கப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த விலையைக் கணக்கிட்டுப் பார்த்த அவர், ஒரு கிலோ வெண்டைக்காய் சிப்ஸின் விலை 7,000 ரூபாயைத் தாண்டும் என்று மதிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் சாதாரணமாகக் கருதப்படும் ஒரு காய்கறி, வெளிநாட்டில் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், நெட்டிசன்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச எல்லைகளைத் தாண்டியதால் வெண்டைக்காய்க்குப் “பதவி உயர்வு” கிடைத்துவிட்டதாக அந்த கிரியேட்டர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் இது போன்ற சாதாரண இந்தியக் சமையலறைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்டு, உலர வைக்கப்பட்டு, கவர்ச்சிகரமான பிராண்டிங் மூலம் ஆரோக்கியமான சிப்ஸ் வகைகளாக மாற்றப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கம் தான்.
View this post on Instagram
“>
உருளைக்கிழங்கு சிப்ஸ்களுக்கு மாற்றாக வெண்டைக்காய், பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சிப்ஸ் வகைகள் அங்கு ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுவதால், நிறுவனங்கள் இதற்குப் பிரீமியம் விலையை நிர்ணயிக்கின்றன. இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாகப் பேக்கேஜிங், இறக்குமதிச் செலவுகள், சில்லறை வர்த்தக லாபம் மற்றும் தாவர அடிப்படையிலான ஸ்நாக்குகளுக்கான உலகளாவிய தேவை ஆகியவை பார்க்கப்படுகின்றன.
