ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் 39 ஆண்டுகளுக்கு பின் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைகிறார். கடந்த 1984-ல் சத்தியமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளரை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சட்டப்பேரவைக்கு சென்ற ஈவிகேஎஸ், அதன்பின் அவர் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி தான். இதன் காரணமாக தேசிய அரசியலில் ஈடுபட்ட அவர், தற்போது அதிமுக வேட்பாளரை வீழ்த்தி மீண்டும் மாநில அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.