சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 11 செவிலியர்கள், அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் குளியல் அறையில் செவிலியர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்து தனது செல்போன் மூலம் அதனை ஆபாசமாகப் படம்பிடித்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரைத் தப்பவிடாமல் மடக்கிப் பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரவள்ளூர் காவல் துறையினரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சத்யராஜ் என்பதும், அவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், செவிலியர்களை ஆபாசமாகப் படம்பிடித்த குற்றத்திற்காக சத்யராஜைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
