சுவையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உணவகங்களை நாடிச் செல்லும் உணவுப் பிரியர்களின் நல்வாழ்வோடு விளையாடும் ஒரு அருவருப்பான சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றில், சமையல் மற்றும் சுத்திகரிப்புப் பணிகளுக்காகப் பொதுக் கழிப்பறையில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்திய கொடூரம் அம்பலமாகியுள்ளது.

பண ஆசைக்காக மக்களின் ஆரோக்கியத்தை அடியோடு மறந்து, நோய்களைப் பரப்பும் வகையில் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த அநாகரிகச் செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அருவருப்பையும் கடும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் சுடச்சுட உணவுகளைப் பரிமாறும் அதே வேளையில், அதன் பின்னணியில் கழிப்பறைத் தண்ணீரைப் பயன்படுத்தியது தொடர்பான வீடியோக்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

சமையல் பாத்திரங்களைக் கழுவுவதற்கும், சமையல் தேவைகளுக்கும் பொதுக் கழிப்பறையிலிருந்து தண்ணீரைப் பிடித்துக் கொண்டு செல்லும் இந்தக் கொடூரக் காட்சி, காண்போரை அருவருப்பில் முகத்தைச் சுளிக்க வைத்துள்ளது. உணவுக் பிரியர்களின் உயிருடன் விளையாடும் வகையில் செயல்பட்ட அந்த உணவக நிர்வாகத்தின் இந்தத் துணிச்சல், உணவுப் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளின் மீதும் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் உடனடியாக அந்த உணவகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். மனித உடலுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்த கழிப்பறைத் தண்ணீரை உணவில் பயன்படுத்தியதற்காக அந்த உணவகத்திற்குப் பூட்டு போடப்பட்டதோடு, உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளி உணவகங்களில் சாப்பிடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான சட்ட நடவடிக்கைகளும், தொடர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.