சென்னை மதுரவாயல் பகுதியில் ‘சாரா இன்போ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, பன்னாட்டு நிறுவனங்களில்  அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இரண்டு நபர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பிரதீப்ராஜா (27) என்ற பட்டதாரி இளைஞர், சமூக வலைதளத்தில் இந்த நிறுவனம் வெளியிட்ட கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, பன்னாட்டு நிறுவன வேலைக்காக 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை இவர்களிடம் கொடுத்து ஏமாந்துள்ளார்.  தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், மதுரவாயலைச் சேர்ந்த சா. பிரபு (41) மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த கு. சிலம்பரசன் (35) ஆகிய இருவரும் சேர்ந்து, வேலை தேடும் அப்பாவி இளைஞர்களைக் குறிவைத்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. முறையான வேலைக்குச் செல்லாமல் குறுக்கு வழியில் கோடீஸ்வரராக முயன்ற இவர்கள், இதே பாணியில் பலரிடம் சுமார் 2 கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளனர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகிய இருவரையும் கைது செய்த  போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். வேலைவாய்ப்பு என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்