ஈரோடு மாவட்டம்  மலைக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமடைந்தார். இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான யுவராஜ் (வயது 26) என்பவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், அப்போது போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாமல் இருந்தது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் உண்மை குற்றவாளியைக் கண்டறியும் நோக்கில் யுவராஜ் மற்றும் குழந்தைக்கு டிஎன்ஏ  ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவில், சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு யுவராஜ் தான் காரணம் என்பதும், அவர் சிறுமியை வன்கொடுமை செய்ததும் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழக  துணைச்செயலாளராக இருக்கும் யுவராஜை போலீசார் போக்ஸோ சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.