மதுரையில் அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே திமுக ஆட்சி நடத்துவதாக நாங்கள் நாகரிகமாக விமர்சித்த நிலையில், தவெக தலைவர் விஜய் ஐந்து நிமிடம் கொளத்தூரில் பேசியதற்கே மு.க.ஸ்டாலின் ‘கொத்து பரோட்டா’ ஆகிவிட்டார் என விமர்சிப்பது எந்த விதத்தில் நாகரிகம் என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுகவை ‘தூர்ந்துபோன சக்தி’ என்று விமர்சிக்க முதலமைச்சர் விஜய்க்கு தைரியம் இருக்கிறதா என்றும், கரூரை சுடுகாடாக்கியவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் சாடினார்.

நேற்றுவரை தங்களோடு பேசிக்கொண்டிருந்த எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்து ராஜினாமா செய்ய வைக்கும் வேலையை முதலமைச்சர் விஜய் பார்த்து வருவதாகக் குற்றம் சாட்டினார். வருமான வரி கட்டாததால் மத்திய அரசிடம் ‘களவாணி’ பட்டம் வாங்கியவர்தான் தங்களை களவாணி எனக் கூறுவதாகவும், உழைப்பு, லட்சியம், கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத சட்டமன்ற உறுப்பினர்களை அவர் ஆட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் சாடினார். இறுதியாக, “விசில் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தவெகவில் இணைந்துள்ள எம்.எல்.ஏ-க்களின் முகத்தைப் பார்த்து அவர்களின் பெயர்களை முதலமைச்சர் விஜய் சரியாக உச்சரித்துவிட்டால், நான் பொதுவாழ்வில் இருந்தே விலகத் தயார்” என  அதிரடி சவால் விடுத்துள்ளார்.