ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர், தற்போது விளையாட்டு மைதானத்தைத் தாண்டி தனது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரத்தால் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார். கார்ட்னரின் மனைவியான மோனிகா ரைட், தனது கணவர் சக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான ஜார்ஜியா வோலுடன் ரகசியத் தொடர்பு வைத்திருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கார்ட்னரின் திருமண வாழ்க்கை மற்றொரு கிரிக்கெட் வீராங்கனையால் முறிந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, மோனிகா ரைட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜார்ஜியா வோலின் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போதே இந்த சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. தனது கணவரை ஆதரிப்பதற்காக இந்தியா வந்திருந்த மோனிகாவுக்கு, கார்ட்னரின் நடத்தையில் பெரிய மாற்றம் தெரிந்துள்ளது. உலகக் கோப்பை முடிந்து சிட்னி திரும்பியவுடன், தங்களுக்குள் இனிமேல் ஒத்துவராது எனக் கூறி கார்ட்னர் தனது திருமண மோதிரத்தைக் கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் சக வீராங்கனைகள் பலரும் கார்ட்னருக்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட மோனிகாவுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட வீராங்கனைகளான கார்ட்னர், ஜார்ஜியா வோல் ஆகியோர் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
