சமூக வலைதளங்களில் பாம்புகளை மீட்பது தொடர்பான பல வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு வீட்டின் திறந்தவெளி முற்றத்தில் புகுந்த, மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை வாய்ந்த நல்லபாம்பைப்  பிடிப்பதற்காகப் பாம்பு பிடி வீரர் ஒருவர் அங்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் பாம்பு பிடிக்கும் குச்சியைக் கொண்டு அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்ற அவர், அடுத்த நொடியே ஒரு விபரீதமான அலட்சியத்தைச் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rahul Sharma (news ) (@rahulsharma.reels)

ஒரு கையில் குச்சியோடு, மறு கையில் தனது மொபைல் போனைப் பிடித்துக்கொண்டு யாரிடமோ தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார். பாம்பை ஒரு பைக்குள் அடைப்பதற்காக, அதன் தலையைப் பிடிக்க அவர் கீழே குனிந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நாகப்பாம்பு அவர் மீது மின்னல் வேகத்தில் பாய்ந்து, அவரது கையைத் தனது தாடையால் கவ்விப் பிடித்தது.

பாம்பு கடித்த அடுத்த சில நிமிடங்களில், அந்த நபர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் வீடியோவின் அடுத்த பகுதியில் உள்ளன. விஷம் உடல் முழுவதும் பரவியதால் அவர் வலியால் துடிதுடித்த போதிலும், நல்ல வேளையாக அவர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவர்களின் தீவிர முயற்சியாலும், உடனடியாக செலுத்தப்பட்ட விஷ முறிவு ஊசியாலும் அவர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினார். பொதுவாக, நாகப்பாம்பின் விஷம் மனித நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்கி, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, கடித்த 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரத்திற்குள் உயிரைப் பறிக்கக்கூடியது. இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், “பாம்பு பிடிப்பது ஒன்றும் விளையாட்டல்ல, இந்த நேரத்தில் போன் பேச என்ன அவசியம் வந்தது?” என்று அந்த நபரின் அலட்சியத்தைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.