சீனாவில் சின் பெருஞ்சுவருக்கு அருகில் அமைந்துள்ள ஷான்ஜியாபோ கல்லறையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது, சுமார் 2,300 ஆண்டுகள் பழமையான, காற்றுப்புகாத வெண்கல பாட்டில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 547 முதல் கி.மு. 221 வரையிலான சின் அரசு அதிகாரத்திற்கு வரத் தொடங்கிய காலக்கட்டத்தைச் சேர்ந்த இந்தக் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பாட்டிலின் உள்ளே இருந்த திரவம், பல நூற்றாண்டுகள் கடந்தும் காய்ந்துபோகாமலும், மாசுபடாமலும் பாதுகாப்பாக இருந்தது விஞ்ஞானிகளைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெண்கல பாட்டிலின் உள்ளே இருக்கும் திரவத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், இது சின் காலத்தில் பயன்படுத்தப்பட்டு பின்னர் மறக்கப்பட்ட ஒரு வகையான ‘பீர்’ மதுபானம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கி.மு. 475 முதல் 221 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மதுபானம், பழங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படாமல், வேதியியல் கலவையின் மூலம் புல், சோளம், தினை, கோதுமை, பார்லி போன்ற தானியங்களைக் கொண்டு காய்ச்சப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இதன் சுவையை மேம்படுத்துவதற்காக அமினோ அமிலங்கள் மற்றும் மதுபானம் தயாரிக்கத் தேவைப்படும் ஆயிரக்கணக்கான பாதுகாக்கப்பட்ட ஈஸ்ட் செல்களும் அந்த பாட்டிலுக்குள் இருந்துள்ளன. இந்த வெண்கல பாட்டிலானது முதலில் ஒரு புட்டி துணியால் மூடப்பட்டு, பின்னர் அதன் திறப்புப் பகுதி மண் மற்றும் கரிமப் பொருட்களின் கலவையால் காற்று உள்ளே நுழைய முடியாதவாறு சீல் வைக்கப்பட்டிருந்ததால், பல நூற்றாண்டுகளாக இந்தத் திரவம் ஆவியாகாமல் அப்படியே தப்பியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
