மனிதர்களுடன் மிகவும் விசுவாசமாக பழகும் விலங்குகளில் முதன்மையானது நாய். பலரும் தங்களது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைத் தங்களின் குடும்ப உறுப்பினராகவே கருதிப் பாசமழை பொழிந்து வருகின்றனர். ஆனால், அதற்கு நேர்மாறாக வாயில்லா ஜீவனிடம் மனிதர்கள் காட்டும் சில கொடூரச் செயல்கள் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கி விடுகின்றன. அந்த வகையில், காரில் வந்த ஒரு நபர், தான் ஆசையாக வளர்த்த நாயை நடுரோட்டில் அநாதையாக இறக்கிவிட்டுவிட்டுத் தப்பியோடிய  வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியுள்ளது.

அந்த வீடியோவில், பரபரப்பான ஒரு சாலையின் நடுவே சொகுசு கார் ஒன்று வந்து திடீரென நிற்கிறது. காரின் கதவைத் திறக்கும் ஒரு பெண், தங்களது வளர்ப்பு நாயை அவசரமாகச் சாலையில் இறக்கி விடுகிறார். தனக்கு என்ன நடக்கிறது என்பதை அந்த நாய் உணர்வதற்குள்ளேயே, காரின் கதவு அடைக்கப்பட்டு வாகனம் மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்படுகிறது.

தன்னை வளர்த்தவர்கள் தன்னைத் தவிக்கவிட்டுச் செல்வதைப் பார்த்த அந்த நாய், செய்வதறியாது மிரண்டு, உயிருக்கு பயந்து அந்த காரின் பின்னாடியே ஓட்டம் பிடிக்கிறது. காரைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், தன் ஜீவனைத் திரட்டி அந்த வாயில்லா ஜீவன் பின்னாடியே ஓடினாலும், அந்த உரிமையாளர்கள் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்று விடுகின்றனர்.

‘எக்ஸ்’ வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வரும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை என்றாலும், இதைப் பார்த்த இணையவாசிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பிராணியை ஆயுள் முழுவதும் உங்களால் பராமரிக்க முடியாது என்றால், அதை ஏன் ஆசையாக வளர்க்க வேண்டும்?  என்று நெட்டிசன்கள் பலரும் அந்த உரிமையாளருக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.