திரைத்துறையில் கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்ற இளம்பெண்களின் கனவை முதலீடாக்கி அரங்கேறும் மோசடிகள் இன்னும் ஓயவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாலிகிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சின்னத்திரை மற்றும் சினிமா துணை நடிகை ஒருவருக்கு, பெருங்குடி பகுதியைச் சேர்ந்த நந்தி ராமநாதன் (65) என்ற முதியவர் அறிமுகமாகியுள்ளார். தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்றும், தாங்கள் புதிதாகத் தயாரிக்கவிருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கத் தேர்வு செய்திருப்பதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கான முதற்கட்ட “போட்டோ ஷூட்” ஒரு தங்கும் விடுதியில் நடப்பதாகக் கூறி, அந்த நடிகையை அங்கு வரவழைத்துள்ளார்.
விடுதிக்குச் சென்ற நடிகைக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த விடுதி அறையில் தயாரிப்பாளர் நந்தி ராமநாதனுடன் 2 இளம்பெண்களும், ஒரு 7 வயது சிறுமியும் இருந்துள்ளனர். அங்கு அறையிலிருந்த பெண் ஒருவர் தனது செல்போன் மூலம் நடிகையை பல்வேறு கோணங்களில் கவர்ச்சியாகப் புகைப்படம் எடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, படத்தில் நீங்கள் சாமி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதால் உடலில் எந்தக் காயத் தழும்புகளும் இருக்கக் கூடாது எனக் கூறி, முகத்தை மூடிக்கொண்டு நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை, சினிமா வாய்ப்பு என்ற பெயரில் நடக்கும் விபரீதத்தைப் புரிந்து கொண்டு, அங்கிருந்தவர்களுடன் தைரியமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடனே விடுதி அறையை விட்டு வெளியேறினார்.
உடனடியாகச் செயல்பட்ட அந்த நடிகை, தனது செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார். தகவலறிந்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நடிகையிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்த போலி தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் என மொத்தம் 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அந்த அறையில் இருந்த 7 வயது சிறுமியை மீட்ட போலீசார் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். சினிமா ஆசை காட்டி நடிகையை நிர்வாணப் படம் எடுக்க முயன்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
