குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (40). துபாயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவர், சமீபத்தில் ஊருக்கு வந்துவிட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் துபாய் சென்றுள்ளார். இவருடைய மனைவி அனிஷா (33), பட்டதாரியான இவர் ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு முதலாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அனிஷாவிடம் ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே திருமணமான அந்த தொழிலாளி, தன்னுடன் தொடர்ந்து பழக வேண்டும் என்று கூறி அனிஷாவுக்கு கடுமையான மன உளைச்சலையும் தொந்தரவையும் கொடுத்து வந்துள்ளார். இதனால்  மனவேதனை அடைந்த அனிஷா, அதிகாலையில் துபாயில் இருக்கும் தனது கணவருக்கு உருக்கமான ஒரு குறுந்தகவலை அனுப்பியுள்ளார். அதில், “நான் அவன் மேல் விருப்பப்பட்டு பழகியது கிடையாது. என்னால் இனி வாழ முடியாது, என்னை அவன் வாழ விடமாட்டான். குழுவில் கட்ட வேண்டிய பணத்தை எனக்காக கட்டி விடுங்கள். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், மகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ், உடனடியாக தனது தந்தையைத் தொடர்பு கொண்டு அனிஷாவின் அறைக்குச் செல்லுமாறு பதற்றத்துடன் கூறியுள்ளார். அதன்படி மாமனாரும் அவரது மகனும் அனிஷாவின் பூட்டிய அறைக்கதவை தட்டியும் சத்தம் வராததால்  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அனிஷா தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அனிஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அந்த ரப்பர் தொழிலாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.