உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது காதலுக்கும் உறவுக்கும் தடையாக இருந்ததாகக் கூறி, காதலியின் 18 மாதப் பச்சிளம் குழந்தையைத் தரையில் தூக்கி அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான விராஜ் என்பவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய ஃபெரோசாபாத் மாவட்ட நீதிமன்றம், இந்தக் கொடூரக் கொலை வழக்கை “அரிதிலும் அரிதானது” எனக் குறிப்பிட்டு இந்த உச்சகட்டத் தண்டனையை வழங்கியுள்ளது. மேலும், குற்றவாளிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்புக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், காவல்துறை மற்றும் நீதிமன்றம் இணைந்து அதிவேகமாகச் செயல்பட்டுள்ளன. குற்றம் நடந்த ஆறே நாட்களுக்குள் காவல்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த நிலையில், வெறும் 40 நாட்களுக்குள்ளாகவே அனைத்து சாட்சிகளையும் விசாரித்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரண தண்டனை தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. எதிர்த்தரப்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற வாதம் முன்வைக்கப்பட்ட போதிலும், ஒரு பச்சிளம் குழந்தையை எந்தவொரு தூண்டுதலும் இன்றி இவ்வளவு கொடூரமாகக் கொன்ற செயலுக்கு எந்தவித இரக்கமும் காட்ட முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.