பெங்களூரு பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பொருளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தனது வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது, அந்தப் பொருளைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியர், வீட்டில் அந்தப் பெண் தனியாக இருப்பதை நரித்தனமாக நோட்டமிட்டுள்ளார். யாரும் இல்லாததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனால் நிலைகுலைந்த அந்தப் பெண்ணைக் வலுக்கட்டாயமாகக் கழிவறைக்குத் தள்ளிச் சென்று, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது ‘எக்ஸ்’  வலைதளப் பக்கத்தில் விரிவாகப் பதிவிட்டு, அதனை பெங்களூரு காவல் துறையின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். இந்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாகப் களமிறங்கிய மாரத்தஹள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆன்லைன் நிறுவன பிரதிநிதியான விஜய் மல்லிகார்ஜூன் காமத் என்பவர்தான் இந்த அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, ஆன்லைன் டெலிவரி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.