சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நேற்று தமிழகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது . இதையொட்டி முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக அவரது வீரத்தை நினைவு கூர்ந்து பதிவுகளை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்துக்கோனின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவதற்காக, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அமைச்சர் ஸ்ரீநாத் அங்கு மரியாதை செலுத்த வருவதாக இருந்தது. ஆனால் அமைச்சர் ஸ்ரீநாத் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் காலதாமதம் ஏற்பட்டதால், கனிமொழி எம்பி நினைவிடத்திற்குள் செல்ல முயன்றார். எனினும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தினர். “மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகுதான் நீங்கள் செல்ல வேண்டும்” என்று கூறி போலீசார் கனிமொழி எம்பியை அனுமதிக்க மறுத்துவிட்டனர். போலீசாரின் இந்த தடையைத் தொடர்ந்து, கனிமொழி எம்பி தனது காரை விட்டு கீழே இறங்கி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சாலையிலேயே நடந்து சென்று மாவீரன் அழகுமுத்துக்கோன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மக்கள் பிரதிநிதியான எம்பியின் காரைத் தடுத்து நிறுத்தி, அமைச்சருக்காகக் காத்திருக்கச் சொன்ன இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
