ஞாயிற்றுக்கிழமை அன்று ஹைதராபாத்தில் ஒரு ரேபிடோ பைக் சவாரியின் போது நடந்த சம்பவம் தான் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பெண் பயணி ஒருவர் ரேபிடோ பைக்கில் ஏறி தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுள்ளார். சவாரி முடிந்ததும், அதற்கான கட்டணமான 100 ரூபாயை ரேபிடோ ரைடர் கேட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணோ 100 ரூபாய் காசை கொடுக்க முடியாது என்று அடம் பிடித்ததுடன், அந்த ரைடரை ஹிந்தியில் கண்டபடி திட்டி அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.

​நிலைமை மோசமானதை உணர்ந்த ரேபிடோ ரைடர், தன் மொபைலை எடுத்து அந்தப் பெண்ணின் அராஜகத்தை வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்தார். அதில், “இந்த பெண் சவாரி செய்ததற்கான 100 ரூபாய் பணத்தை தர மறுக்கிறார், நான் காசு கேட்டால் என்னை ஹிந்தியில் அசிங்கமாக திட்டுறாங்க” என்று ரைடர் ஆதங்கத்தோடு பேசுகிறார். காசு கொடுக்காமல் அந்தப் பெண் மொபைலை நோண்டிக்கொண்டே அங்கிருந்து நகர பார்க்க, விடாத ரைடர் “நீங்க எவ்வளவு தூரம் போனாலும் நான் விடமாட்டேன், என் காசை தராமல் நான் இங்கிருந்து போக மாட்டேன்” என்று பின்னாடியே சென்றுள்ளார்.

மேலும், “வாருங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் பேசிக்கொள்ளலாம்” என்று ரைடர் கூப்பிட்டதும், அந்தப் பெண் ஆத்திரமடைந்து, “நீ போலீஸ் ஸ்டேஷன் கூப்பிட்டால், உன் மீது பெண் வன்கொடுமை (Harassment) பொய் வழக்கு போட்டுவிடுவேன்” என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.